உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தை’ கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க செனட்

ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை முறியடித்துள்ளது இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வரும் சூழலிலேயே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்க செனட் சபையானது குடியரசுக் கட்சியினரின் (Republicans) கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதாலும், இந்த முயற்சி முறியடிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.எவ்வாறாயினும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும்.

தனது போர்க் கொள்கைக்கு எதிராக அமையும் இத்தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகும்.தற்போதைய நிலையில் குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கம் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் நிலவுவதால், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment