தாயகச் செய்தி 

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

https://youtu.be/Xzn0k3zATN0
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர். இத்தகையசூழலில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏகம்பைக் குளம், பிராமண குளம் என்பன இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் காணப்படுகின்றது. எனவே குறித்த குளங்கள் விடுவிக்கப்படவேண்டும்.
அத்தோடு தற்போது குறித்த பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருவதாகவும் , இந்நிலையில் அப்பகுதியை வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிய முடிகின்றது. இதுதொடர்பில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விளக்கமளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளபோதும், இராணுவ முகாம் முற்றாக அங்கிருந்து அகற்றப்படவில்லை. அங்கிருந்து இராணுவ முகாம் அகற்றப்படுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்கமுடிகின்றது.
இந்நிலையில் இராணுவம் விடுக்கின்ற இந்தப்பகுதியை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக எடுத்துக்கொள்வார்கள்.
எனவே அப்பகுதியிலிருந்து இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பிற்பாடு ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் ஊடாக குறித்த குளங்களுக்குரிய பகுதிகளை அளவீடுசெய்து எல்லைகளை வரையறுத்து வனவளத் திணைக்களத்திடமிருந்து குளங்களுக்குரிய பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் எவ்வாறாயினும் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்ற இக்குளங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment