கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்
கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து.
கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இத்தகைய கட்டடங்கள் விரைவாக முன்னுரிமை அடிப்படையில் முழுமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் 04.03.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முழுமைப்படுத்தப்படாத பாடசாலைக் கட்டங்கள்தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதுடன், அவ்வாறான கட்டடங்களை முழுமைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதமரிடம் பின்வருமாறு கேள்விஎழுப்பினார்,
அரச பாடசாலைகளில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட கட்டடங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பாகவும், குறித்த பாடசாலைக்கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அத்தோடு அவ்வாறு கட்டி முடிக்கப்படாத பாடசாலைக் கடட்டங்களைக் கட்டி முடிப்பதற்கென கடந்த 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்ட கட்டடங்களின் விபரங்கள் தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அக்கட்டங்களின் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்படும் காலப்பகுதிதொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை குறித்த பகுதியளவில் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டடங்களால் மாணவர்கள் மற்றும் பாடசாலை பணியாட் தொகுதிக்கு ஆபத்துக்கள் ஏற்படாமலிருக்க மேற்கொள்ளப்பட்ட டனநடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டதுடன், குறித்த கட்டங்களை பாதுகாப்பான முறையிலும் துரிதகதியிலும் நிர்மாணித்து முடிப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் பாடசாலை வளாகங்களுக்குள் தொடக்கம் பெற்று நீண்ட காலமாக முழுமையடையாத கட்டுமானங்கள் காரணமாக விபத்து ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதை மேற்கோளிட்டு கடந்த 2025.08.03 அன்று The Sunday Times செய்தித்தாள் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன் பிரதி இங்கே என்னிடமுள்ளது.
மேற்படி இடர்நிலையை முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2025.07.14 அன்று நான் நேரில் சென்றும் உறுதிப்படுத்த முடிந்தது. எனவே,
விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய கட்டடங்கள் விரைவாக முன்னுரிமை அடிப்படையில் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
மேற்படி கட்டடங்களின் கட்டுமானம் முடிவுறுத்தப்படும் வரை மாணவர்களும் கல்வி சார் ஊழியர்களும் முழுமைப்படுத்தப்படாதுள்ள மேற்படி கட்டடங்களை அணுகாத வகையில் பாதுகாப்பு எல்லைப்படுத்தலை உரிய கட்டடங்கள் சார்ந்து மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்
அத்தோடு இவ்வாண்டுக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டில் இத்தகைய கட்டட முழுமைப்படுத்தல்களுக்கான தங்களின் ஏற்பாடு என்ன எனவும், மேற்படி கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் முன்னுரிமை ஒழுங்கு எவையேனும் பேணப்படுகிறதா எனவும் பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இதன்போது பதிலளிக்கையில்,
கடந்தகாலங்களில் தொடங்கப்பட்ட பல பாடசாலைக் கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் முடிவுறுத்தப்படாமல் இருப்பதை நாம் அறிவோம்.
குறிப்பாக மேல்மாகாணத்தில் 106, பாடசாலைக்கட்டடங்களும், தென்மாகாணத்தில் 04 பாடசாலைக் கட்டடங்களும், மத்தியமாகாணத்தில் 38 பாடசாலைக்கட்டடங்களும், வடமேல்மாகாணத்தில் 38 கட்டடங்களும், ஊவா மாகாணத்தில் 08 பாடசாலைக் கட்டடங்களும், வடமத்திய மாகாணத்தில் 54 பாடசாலைக்கட்டடங்களும், சப்பிரகமுவ மாகாணத்தில் 94பாடசாலைக் கட்டடங்களும், வடக்குமாகாணத்தில் 82பாடசாலைக் கட்டடங்களும், கிழக்கு மாகாணத்தில் 44பாடசாலைக் கட்டடங்களுமாக மொத்தமாக 468 பாடசாலைக் கட்டடங்கள் இதுவரை கட்டி முடிக்கப்படாமல் காணப்படுகின்றன.
இவற்றில் சில நிர்மாணப் பணிகளையும் மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளையும் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்ட முகாமைத்துவ அலகில் இருந்த பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டன.
2020ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் இத்திட்ட முகாமைத்துவ அலகு மூடப்பட்டது.
இதன் காரணமாக, இந்த நிர்மாணப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான போதிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கல்வி அமைச்சின் வசம் இருக்கவில்லை.
அத்துடன், நாட்டில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் காரணமாகவும் திட்டக் காலப்பகுதிக்குள் வேலைகளை நிறைவு செய்ய முடியாமல் போனது.
அதன் பின்னர் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி சூழலில் இந்த நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும், தனியார் நிதி ஒதுக்கீடு அல்லது ஏனைய உதவிகளின் மூலம் நிறைவு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட சில கட்டடங்களின் பணிகளும், அனுசரணையாளர்களினால் வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாடசாலைக் கட்டடங்கள் பலவற்றின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கென கடந்த 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்தவகையில் மேல்மாகாணத்தில் 47 பாடசாலைக்கட்டடங்களுக்கும் மத்திய மாகாணத்தில் 29பாடசாலைக் கட்டடங்களுக்கும், வடமேல் மாகாணத்தில் 23பாடசாலைக் கட்டடங்களுக்கும், ஊவா மாகாணத்தில் 01 பாடசாலைக் கட்டடத்திற்கும், வடமத்திய மாகாணத்தில் 38பாடசாலைக் கட்டடங்களுக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 89பாடசாலைக் கட்டடங்களுக்கும், வடக்கு மாகாணத்தில் 60 பாடசாலைக் கட்டடங்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் 39பாடசாலைக் கட்டடங்களுக்குமாக மொத்தம் 356பாடசாலைக் கட்டடங்களைக் கட்டிமுடிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளநிலையில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
தற்போது இத்திட்டங்களை மேற்கொள்வதற்கான செலவுத்தொகைகள் அதிகரித்திருக்கின்றன. எனவே இத்திட்டங்களுக்காத ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் பணிகளை முன்னெடுக்க ஒப்பந்ததாரர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆகவே மீண்டும் புதியவிலையில் ஒப்பந்தங்களைச் செய்யவேண்டியுள்ளது.
இதுதொடர்பில் இக்கருத்திட்டங்களைச் செயற்படுத்துபவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றோம். எனவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு இடைநிறுத்தப்பட்டுள்ள இவ்வாறான கட்டடங்களைப் பாதுகாப்பான முறையில் மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான கட்டிமுடிக்கப்படாத கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும்வரையில் பயன்படுத்தவேண்டாமென பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தினைப் பயன்படுத்துகின்ற பாடசாலை இருக்குமானால், அந்தபாடசாலை தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரினார்.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
எனவே விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய கட்டடங்கள் விரைவாக முன்னுரிமை அடிப்படையில் முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

