மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ஆளில்லா வானூர்திகள் தாக்கியுள்ளன.
இதன் விளைவாக சிறு அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் கட்டடத்திற்கு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இதேவேளை ஈரான் மீது கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து குறைந்தது ஆறு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆரம்பகட்ட தாக்குதல் இலக்கின் ஒரு இடத்திலிருந்து இரண்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கட்டார் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஈரானின் இரண்டு ளுரு-24 ரக போர் விமானங்களை கட்டாரின் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஈரானினால் ஏவப்பட்ட 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 5 ஆளில்லா வானூர்திகளையும் கட்டார் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

