இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் புதுடெல்லி செல்லவுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த வாரம் புதுடெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரை சந்தித்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளோம்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதேவேளை, மீனவர்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை மீன்வளத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டு கோரிக்கையில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு முழுமையான பயன் கிடைக்கும் வகையில் பொருத்தமான பல நலத்திட்டங்கள் மீன்வளத்துறையின் நிதி ஒதுக்கீட்டு கோரிக்கையில் இடம்பெறும்.” எனவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

