1093 வெளிநாட்டவர்களை நாடுகடத்த தீர்மானம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் மேலும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ள 93 நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போல் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். ‘நாடு முழுவதும் ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் 38 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய மற்றும் பிரபல குற்றச் செயல் கும்பல் சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வர முடிந்துள்ளது.
இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான விசேட வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் சுமார் 1,490 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும், 2025ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் அரசாங்கத்திற்கு கையகப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக முடக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் 4,652 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் மாத்திரம் 2,168 கிலோகிராம் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

