அநுர கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படும் மக்கள்: சு.நிசாந்தன்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிகழ்வுகளுக்கு யாழ் அரச பேருந்துகள் மற்றும் அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக மக்கள் அழைத்துச் செல்லப்படுவதாகத் தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளர் சு.நிசாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அந்த பேருந்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார்.
கிராம சேவகர் கூட இன்றைய நிகழ்வுக்கு மக்களை திரட்டி ஏற்றிச்சென்றார் என்றும் தகவல் வந்துள்ளது.
அதைவிட பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களும் அழுத்தத்தின் மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால் சேவைகளை பெறுவதற்கு சென்ற மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த போது என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரங்கமும் செய்கின்றது. இந்த அரசாங்கமானது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக இன்றைய நிகழ்வில் செயற்பட்டிருக்கின்றது.

