செய்திகள் தாயகச் செய்தி 

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

நாட்டில்,2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில்

நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோல்ட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.Hayleys Fentons Limited நிறுவனம் இத்திட்டத்தை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாவிற்கு வழங்கப்படவுள்ள இத்திட்டத்தை மார்ச் 2027 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல்,தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து 200 வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்குதல், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மன்னார் பாலம் வழியாக தள்ளாடி நகரம் வரை நடை பாதைக்காக புதிய மின்விளக்குகள் பொருத்துதல், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து, சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் இலகுவாக நீர் வழிந்தோடும் வகையில் புதிய நீர்வழிகளை உருவாக்கி வெள்ளத்தைத் தடுக்க கால்வாய்களைத் தோண்டுதல், போன்ற பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வுகளும் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றன.நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதோடு, பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்கவுள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில்,மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது தேவை என்றும் குறிப்பிட்டார்.

மன்னாரை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment