குருக்கள் மடம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
குருக்கள்மடம் மனித புதைகுழியில் இடம்பெற்று வந்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று தினங்களாக இப்புதைகுழியில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்று ஆறடி ஆழம் வரை தோண்டப்பட்டது.இருந்தபோதும் மனித எச்சங்கள் எதையும் இதற்குள் காணக்கிடைக்கவில்லை. இதனால், இப்பணிகள் நேற்று முன்தினம் (01) கைவிடப்பட்டன.தோண்டப்பட்ட இடம் மண்ணிட்டு மூடப்பட்டது.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட வேறு இடத்தில் பணிகளைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வீதியால் பயணம் செய்திருந்த 170 முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் மூடப்பட்டிருந்தனர்.

