செம்மலை பெரிய குளக்கட்டுகுளம் உடைப்பு கமநல உதவி ஆணையாள ருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி;
செம்மலை பெரியகுளக்கட்டு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கமநல உதவி ஆணையாளருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி; சீரமைப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்து.
முல்லைத்தீவு – செம்மலையில் உள்ள பெரியகுளம் உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 27.02.2026அன்று நேரில் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார்.
அத்தோடு உடைப்பெடுத்துள்ள குறித்த குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார்.
குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், நிலமைகளும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
அந்தவகையில் சுமார் 75ஏக்கர் வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குறித்த குளத்தின் அணைக்கட்டு மூன்று இடங்களில் உடைப்பெடுத்துள்ளது.
இதனால் கடல்நீர் குளத்தினுள் உட்புகுவதால் வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயநிலை காணப்படுவதாகவும், கிராமத்தின் குடிநீரிலும் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.
அத்தோடு குறித்த குளத்தின் அணைக்கட்டை செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதற்கான பாதையாகவும் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்வதில் செம்மலை மற்றும் செம்மலைகிழக்கு கிராமமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றமை தொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதேவேளை இந்த குளத்தின் அணைக்கட்டினைச் சீரமைத்துத் தருமாறு உரியவர்களுக்கு கமக்கார அமைப்புக்களினூடாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இதுவரை குறித்த குளக்கட்டினை சீரமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்தனர்.
அத்தோடு செம்மலை கிழக்கு, புளியமுனைப்பகுதியில் செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களால் பெருமளவில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில், புளியமுனைப் பகுதியில் அதிகரித்துள்ள காட்டுயானைகளின் கெடுபிடிகளால் தமதுவிவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே செம்மலை கிழக்கு புளியமுனைப் பகுதியில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற ஈறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
இதன்தொடர்சியாக கடந்த 23.02.2026அன்று முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அதேவேவளை குறித்தபகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவேண்டுமென கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த குளக்கட்டுச் சீரமைப்பு மற்றும் யானைவேலி அமைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்த கமநல உதவி ஆணையாளர், எதிர்வரும் 27.02.2026 வெள்ளிக்கிழமையன்று உடைப்பெடுத்துள்ள பெரிய குளத்தினை நேரடியாக வருகைதந்து தாம் பார்வையிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய கடந்த 27.02.2026அன்று குறித்த பெரிய குளம் பகுதிக்கு கமநல உதவி ஆணையாளரை நேரடியாக அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாதிப்பு நிலைமைகளை காண்பித்துள்ளார். அத்தோடு குறித்த குளத்தின் சீரமைப்புபணியை துரிதப்படுத்துமாறும், புளியமுனைப்பகுதிக்கான யானை வேலியையும் விரைந்து அமைக்குமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென கமநல உதவி ஆணையாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டது. மேலும் குறித்த களஆய்வில் அப்பகுதி மக்களும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

