அண்மை செய்தி இலங்கை செய்தி. 

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை பரீட்சைக்காக பாடசாலை ரீதியில் விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் உள்ளடங்கலாக 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்று படுத்திக் கொள்வது கட்டாயமாகும். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பரீட்சைக்கான கால அட்டவணையை கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும்.மேலும் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், புளூ டூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்ல முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயற்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப் பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அன்மைச் செய்தி

Leave a Comment