சிறைச்சாலை மோதல்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளுக்கு அழைப்பு
சிறைச்சாலைகள் சில தொடர்பில் பதிவாகியுள்ள அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி கலந்துரையாடலுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர்;சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியவை. மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் கணிசமானளவு முன்னேற்ற நிலையில் உள்ளன. அத்துடன், மஹர சிறைச்சாலை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் அதன்பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.அதேவேளை, சிறைக் கைதிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய நேரிடும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று எச்சரித்துள்ளது.

