தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிக்குளம் மக்களின் 753ஏக்கர் காணிகளை நிபந்தனை களுடன் விடுவிக்க இணக்கம்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க இணக்கம் தெரிவித்தார் – பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர

விஜயரத்தினம் சரவணன்

மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவில், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள 1012ஏக்கர் காணியில் 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பதிலளித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் 25.05.2026இன்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக் கூட்டங்களில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு மிகத் தெளிவாக என்னால் வலியுறுத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியினால் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 22.05.2026அன்று பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்திலும் இந்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அக்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

அதற்கமைய மன்னாருக்கு நேரடியாக வருகைதந்து அந்த விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் ஆராயப்படுமென பிரதிப்பாதுகாப்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முள்ளிக்குளம் மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு தமது இருப்பிடத்தை விட்டு இம்பெயர்ந்தனர்.

அவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 2002ஆம் ஆண்டில் தமது தமது பகுதிகளில் மீளக்குடியேறினார்கள். இதன்போது அந்த மக்களுக்கு 150வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீளவும் 2007ஆம் ஆண்டு தமது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த இதுவரை அவர்களது வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

அந்த மக்கள் மலைக்காடு மற்றும் காயாக்குழி ஆகிய கிராமங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக வாழ்விடங்கள், குளங்கள், வயல்காணிகள் என்பவற்றை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.

கடற்படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, அங்கு தோட்டச் செய்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அறிகின்றோம்.

அந்தப்பகுதிகளில் மக்களுக்காக அமைத்துக்கொடுக்கப்பட் 150வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளில் கடற்படையினரது குடும்பங்களும் தங்கவைக்ப்பட்டுள்ளன.

அத்தோடு முள்ளிக்குளம் கடற்றொழிலாளர்கள் பயன்படுத்திவந்த இறங்குதுறையும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

எனவே அந்தப்பகுதியிலுள்ள கடற்றொழிலாளர்கள் பெருத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர் எனவே அந்த இறங்குதுறையினையும் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

கடந்த 2016ஆம் ஆண்டு அந்தப்பகுதியில் கடற்படையால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 77ஏக்கர் காணிகளும் அந்தமக்களுக்கு விடுவித்துக்கொடுக்கப்படவில்லை. கடற்படையினரால் வனவளத் திணைக்களத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த மக்களின் காணிகளை வனவளத் திணைக்களத்திடம் விடுவித்துக் கொடுக்கப்பட்டதால், அந்தக்காணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்தகால அரசாங்கங்களைப்போல் இல்லாமல், இந்த அரசாங்கம் தங்களுடைய காணிகளை விடுவிப்பார்கள் என மக்கள் நம்புகின்றார்கள். எனவே அந்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள். அந்த மக்களுடைய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் – என்றார்.

இதன்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பதிலளிக்கையில்,

இந்த முள்ளிக்குளம் காணி விடுவிப்புத் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்மிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

அந்தவகையில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 1012ஏக்கர் காணிகளில், 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதற்காகவே இவ்வாறு கள ஆய்வுகளையும், கலந்துரையாடலையும் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

குறிப்பாக அவ்வாறு விடுவிக்கப்படும் பகுதிகளில் காடழிப்புக்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக வனவளத்திணைக்களத்திடமே அந்தக் காணிகளை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையிருப்பின், அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானங்களை உரிய அமைச்சுக்கு அனுப்பிவைக்கின்றபோது அந்தக் காணிகளை மக்களுக்கு விடுவித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பாதுகாப்பு அமைச்சரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment