தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத் திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம்

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (26.05.2026) விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ
அருண ஜெயசேகர அவர்கள், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளில் விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டார்.
இந்த கள ஆய்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ராமலிங்கம் சந்திரசேகர் , பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் நிலப்பரப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, முதற்கட்டமாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடுகள் இதுவரை வழங்கப்படாத விவகாரமும் அரசாங்க அதிபரால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடல் நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
அதேவேளை, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கான அனுமதிகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விஜயம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மக்களின் நீண்டகால நில பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்ற எதிர்பார்ப்புகள் தொடர்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

அன்மைச் செய்தி

Leave a Comment