மீகொடையில் நள்ளிரவில் அரங்கேறிய பெரும் சோகம் ஆறு பேர் உயிரிழப்பு.
மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (தானசாலை) ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது தப்பியோட முயன்ற கெப் வண்டியையும் அதன் சாரதியையும் கொடகம சந்தியில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பிலியந்தலையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த சாரதி, விபத்து இடம்பெற்ற போது கடுமையான குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 7 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன், மீகொழ் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

