தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக ;ரவிகரன் எம்.பி

நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக; வீதியில் உலரவிடும் நெல்லினை உணவுப் பாதுகாப்பு ஆய்விற்குட்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வீதியோரங்களில் நெல் பரவி உலர்த்துவதால் விபத்துகள் ஏற்படுவதுடன், உணவுப்பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அதேவேளை வீதியில் உலரவிடும் நெல்லினை உணவாக உட்கொள்வோர்க்கு நீண்டகாலச் சூழமைவில் உடலியல் பாதிப்புக்கள் ஏற்படுமா? என்பது தொடர்பிலும் முறையான உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 07.10.2026இன்று உரையாற்றும்போதே அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அந்தவகையில் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நெல் உலர்த்துவதில் விவசாயிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

வீதியோரங்களிலும் வீதியின் ஒருபாதியிலும் நெல் உலர்த்தும் நடைமுறைக்கு விரைவாக மாற்று நடைமுறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.வீதியோரங்களில் நெல் பரவி உலர்த்துவதால் ஒருபுறம் விபத்துகள் சம்பவிப்பதோடு மறுபுறம் உணவுப்பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

தாரோடு மாசாகக் கலந்திருக்கும் உலோகங்கள், வாகனச் சக்கரங்களின் ரயர் தேய்மானத் துணிக்கைகள், வேகத் தடுப்பு உதிரிப்பாகங்களின் தேய்மானத் துணிக்கைகள், தெருவில் சிந்தும் எரிபொருள், பொறிநெய் உள்ளிட்டவற்றின் மாசுக்கள் வெப்பமான சூழ்நிலையில் காயவிடப்படும் நெல்லோடு கலக்கும் வாய்ப்பு உள்ளதா? நீண்டகாலச் சூழமைவில் அவற்றை உணவாக உட்கொள்வோர்க்கு உடலியல் பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது தொடர்பிலும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பில் அரசு கூடுதல் கரிசனை கொள்ள வேண்டும்.

எனவே, நெல் உலர்த்தும் தளத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நெல் உலர்த்திகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் என்பவற்றுக்கு மேலாகவும் மாற்று நடைமுறைகள் ஊடாக நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

அன்மைச் செய்தி

Leave a Comment