யாழில், பேரழிவை ஏற்படுத்தும் கனமழை; கிழக்கிலும் அவதானமாக இருக்கவும்
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யுமென, யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இதனால், யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்,நேற்று (07) ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.யாழ்.ஊடக மையத்தில் நடத்தப்பட்ட இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 09 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுnkன எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக இது அமைகிறது.
இதன் நகர்வுப் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்து மிக குறைந்தளவு வேகத்தில் நகரலாம்.இதனால் எதிர்வரும் 08, 09, 10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளலாம்.அத்துடன் 09,10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் தித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியும். அத்துடன், இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது.எனவே,பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதே நேரம் இன்று 08 ஆம் திகதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

