இலங்கை செய்தி. செய்திகள் 

வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

இலங்கை வனஜீவராசிகள் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு முதன்முறையாக நடைபெற்றது. கிரிதலே தேசிய வனஜீவராசிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமையில் இடம்பெற்றது.

நாட்டின் வனப்பகுதிகளையும், வனவிலங்குச் சம்பத்துக்களையும் தமது உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதையும், அவர்களைப் பாராட்டுவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சேவைக்காலம் மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான களக் கல்வித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, தத்துவார்த்த அறிவு, களத்திறன், ஒழுக்கம் மற்றும் விசேட நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய உத்வேகம் ஆகியவை இந்தப் பதக்க வழங்கலில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.வனஜீவராசிகள் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், இத்தகைய கௌரவிப்பு நிகழ்வுகளை ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக எதிர்காலத்திலும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி, “வனவிலங்குகளைப் பாதுகாப்பது என்பது ஒரு சாதாரண வேலை அல்ல, அது ஒரு பெரும் அர்ப்பணிப்பு. இந்த அங்கீகாரம் அதிகாரிகளின் மன உறுதியை மேம்படுத்தி, இயற்கை வளங்களைக் காப்பதில் அவர்களுக்கு மேலதிக உத்வேகத்தை அளிக்கும்” எனத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment