முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார்.
முல்லை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; நெல் உலர்த்திகளின் நிலை தொடர்பில் கேட்டறிந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரைச் சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகளின் நிலைதொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இச்சந்திப்பானது முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள ஒரு நெல் உலர்த்தியும், பனங்காம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்தியுமே பயன்பாட்டில் இருப்பதாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள மற்றுமொரு நெல் உலர்த்தியும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் குமுழமுனையிலுள்ள நெல் உலர்த்தியும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்தியும் பழுதடைந்துள்ளதால் பயன்பாடற்று காணப்படுவதாகவும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பானரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் போதுமான நெல் உலர்த்தி வசதிகள் இன்மையாலும், இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகள் பழுதடைந்து பயன்பாடற்றுக் காணப்படுவதாலுமே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் அறுவடைசெய்கின்ற நெல்லை உலர்த்துவதில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் சுட்டிக்காட்டினார்.
எனவே கூட்டுறவுச் சங்கங்களின் பொறுப்பிலுள்ள நெல் உலர்த்திகளை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென இதன்போது வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பழுதடைந்த நெல் உலர்த்திகளை சீர்செய்வதற்கான மதிப்பீட்டு அறிக்கைகளையும், புதிய நெல் உலர்த்தியினை கொள்வனவு செய்வதற்கான மதிப்பீட்டு அறிக்கையினையும் தம்மிடம் கையளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விரைவில் உரிய மதிப்பீட்டு அறிக்கைகள் கையளிக்கப்படுமென கூட்டுறவு உதவி ஆணையாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

