நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை
நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை ஏற்கெனவே கண்டறிப்பட்டு, இதற்கான விரிவான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கம் இன்மை மற்றும் உடல் தோற்றம் குறித்த அதிருப்திகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இணையவழி துன்புறுத்தல், வன்முறை மற்றும் தவறான உள்ளடக்கங்களை எதிர்கொள்கின்றமையும் தெரியவந்துள்ளது. 8- வயது முதல் 12 வயதுடைய சிறுவர்கள் ஒரு நாளில் சராசரியாக 5 மணிநேரமும் இளைஞர்கள் 7 மணிநேரமும் திரைக்கு முன்னால் செலவிடும் நிலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

