இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும்; ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

