அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்க 65மில்லியன் நிதி ஒதுக்கீடு. விமல் ரத்நாயக்க
அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 65மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார் – விமல் ரத்நாயக்க
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடியைச்சேர்ந்த விவசாயிகளும் தமது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் கோட்டைக்கேணி தொடக்கம், அக்கரைவெளி வரையிலான 16கிலோமீற்றர் வீதியும் அதனோடிணைந்த இரண்டு பாலங்களும் சீரின்றிக்காணப்படுவதால் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வீதியையும், அதனோடிணைந்த பாலங்களையும் சீரமைத்துத் தருமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீதியில் அமைந்துள்ள அக்கரைவெளி பாலத்தை நிர்மாணிப்பதற்கு 65மில்லியன் ரூபாயினை தாம் ஒதுக்கீடுசெய்வதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 11.02.2026இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிலேயே விமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
இதன்போது இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாயநிலங்களுக்காகச்செல்லும் கோட்டைக்கேணி தொடக்கம் அக்கரைவெளி வரையான 16கிலோமீற்றர் தூரமான வீதியையும் அதனோடிணைந்த இருபாலங்களையும் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக அக்கரைவெளி, கன்னாட்டி, மாரியமுனை, கீழ்காட்டுவெளி, மேல்காட்டுவெளி, பாலங்காடு, கூமாவடிக்கண்டல், நாடயடிச்சமுறிப்பு, சிவந்தமுறிப்பு, சூரியனாறு, எரிஞ்சகாடு உள்ளிட்ட 2000ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை நிலங்களுக்குச் செல்லும் வீதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 800இற்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றன.
இவ்வாறு குறித்த வீதியும் அதனோடு இணைந்த இரு பாலங்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இம்முறை பெரும்போகத்தில் அக்கரைவெளிப்பகுதியில் அறுவடைசெய்யப்பட்ட 5000வரையான நெல் மூடைகளை விவசாயிகள் வெளியே எடுத்துச் செல்லமுடியாமல் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 02.02.2026அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை நேரடியாகப் பார்வையிட்டிருந்தேன்.
எனவே குறித்த வீதியையும் அதனோடிணைந்த இரு பாலங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
இதன்போது குறித்த வீதியிலுள்ள ஏதாவது ஒரு பாலத்தினை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடுசெய்யமுடியுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்ததுடன், எந்தப் பாலத்தை அமைப்பதென துறைசார்ந்தவர்கள் ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில் அக்கரைவெளிப்பாலத்தை முதலில் அமைப்பதே பொருத்தமானதாக இருக்குமென இதனனபோது பொறியியலாளர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய அக்கரைவெளிப் பாலத்தை அமைப்பதற்கு 65மில்லியன் நிதியைத் தாம் ஒதுக்கீடுசெய்வதாக விமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கோரிக்கைக்கமைவாக குறித்த 16கிலோமீற்றர் தூரமான வீதியில் 5கிலோமீற்றர் வீதியை முதற்கட்டமாக சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதற்குரிய சீரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

