வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் வரையானோருக்கு எதிராக காவல் துறையினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் அவர்களுக்கு மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்
இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்
.அமைதி வழிப் போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பிலும் தீர்க்கப்பட்ட வழக்குகளினூடாகவும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளமையை விசாரணையின்போது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாக எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.ஜனநாயக உரிமையை பாவித்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு 106ஆம் பிரிவின் கீழ் காவல் துறையினரால் வழக்கு தொடர முடியாதென்பதையும் நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வழக்கை நிராகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை சொந்தப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

