பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி! காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உங்களுக்கு திரைக்கலைப் படைப்பாளி! எங்களுக்கு விடுதலைப் போராளி!
காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி.
இந்திய அரசு வழங்கிய “பத்மபூஷன்” எனும் விருதை விட என் தமிழீழ மக்களின் விடுதலையே எனக்கு முதன்மையானது என்று கூறி பத்மபூஷன் விருதை உதற எறிந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தமிழீழம் சென்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து உறவாடித் திரும்பியவர் பாரதிராஜா. பாரதிராஜா அவர்கள் மீது அளவற்ற பெருமதிப்பை வைத்திருந்தார் தலைவர் பிரபாகரன்.
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த திரைக்கலை படைப்பொன்று உருவாக்க பாரதிராஜா அவர்கள் திட்டமிட்டிருந்தும் அவருடைய அந்த கனவு நிறைவேறாமல் போனது உலகத் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பேரிழப்பாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்கின்றது. காலத்தின் தேவையான அந்த விடுதலை அடையப்படும் வெற்றித் திருநாளில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழீழ மக்களால் தங்கள் மண்ணில் விடுதலைக்குத் துணை நின்ற ஒரு மாபெரும் போராளியாக கொண்டாடப்படுவார்.
விழிகளில் ஒளியை நிறுத்திக் கண்களை மூடிய பாரதிராஜா அவர்களுக்கு விழிகளில் கண்ணீரைத் தேக்கி விம்மும் நெஞ்சோடு அஞ்சலி செலுத்துகிறோம்.
(கையொப்பம்: காசி ஆனந்தன்)
கவிஞர் காசி ஆனந்தன்,
தலைவர்,
ஈழத்தமிழர் நட்புறவு மையம்


