டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!
டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!- கைத்துப்பாக்கி விவகாரம் தொடர்பில் விசாரணை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26) கைது செய்யப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவத்தினால் அவருக்குத் தற்காப்புக்காகச் சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக கைத் துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதூஷ் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, நாளை (27) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

