சட்ட விரோத கடற் றொழில் செயற்பாடு களைக் கட்டுப் படுத்த அரசு வக்கற்றிருக் கின்றது; ரவிகரன்
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு வக்கற்றிருக்கின்றது; கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.
முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசுவக்கற்றிருப்பதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
எனவே இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவில் 30.03.2026இன்று இடம்பெற்ற சட்டவிரோத தடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்துக் கடற்பரப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் எமது அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நானும் ஒரு மீனவன் என்ற வகையிலே எமது மீனவர்தள் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன்.
இது தொடர்பில் பல தடவைகள் உரிய தரப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், பாராளுமன்றிலும் இந்த சட்டவிரோத கடற்றொழில் ஙெயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.
கடந்த 20.03.2026ஆம் திகதிகூட இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பாராளுமன்றில் வலியுறுத்தியிருந்தேன். அத்தோடு கடற்றொழில் அமைச்சருடனும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்குமாறு லலியுறுத்தினேன்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொக்கிளாய் தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரையான 74கிலோமீற்றர் தூரமான கடற்பரப்பில் பல்லாயிரக்கணக்கான எமது மீனவர்கள் கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளதால் கடற்றொழிலை மாத்திரம் வாழ்வாதரமாககொண்ட அந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் என மீனவ மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்ற நிலையே தொடர்கின்றது.
கடற்றொழில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்ற எமது அப்பாவி மீனவர்கள் எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் கடுமையான உடலுழைப்புடன் கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொண்டு வெறுமையான வலைகளுடனும், படகுகளுடனும் கரைதிரும்புகின்ற அவலங்களே இங்கு இடம்பெறுகின்றன.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையினாலேயே எமது மீனவர்கள் இவ்வாறு வெறுமையான படகுகளுடன் கரைதிரும்பவேண்டிய நிலை காணப்படுகின்றது.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய தரப்பினரால் ஒருநாளாவது எமது மீனவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியுமா?
அவ்வாறு ஒருநாளாவது எமது மீனவர்களின் இன்னல்கள் நிறைந்த வாழ்வை அவர்கள் வாழ்ந்து காட்டுவார்களெனில் அவர்களால் எமது மீனவர்களின் துன்ப துயரங்களை உணரக்கூடியதாக இருக்கும்.
எனவே தயவுசெய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற விதமான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, மீனவர்களது வாழ்வாதாரம் செழிப்பதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துமாறு உரியவர்களைக் கோருகின்றோம்.
அவ்வாறாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி, கடற்றொழில் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைச் சீராகச் செய்வதற்குரிய நிலை ஏற்படுத்தப்படுமெனில் எமது மீனவர்கள் அரசின் நிவாரணங்களை எதிர்பார்க்கமாட்டார்கள்.
கட்டுக்கடங்காத வகையில் எமது கடற்பரப்புக்களில் திருட்டுத்தொழில்கள் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. ஆனால் அத்ததைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இந்த அரசு வக்கற்றிருக்கின்றது.
எமது மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக கவனயீர்ப்பில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தவுடன் உடனடியாக இங்கு ஓடோடி வந்தேன். எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும்போது நாம் வீட்டுக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
மக்கள் தமக்கு பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்துப் போராடுகின்றபோது மக்கள் பிரதிநிதியாக மக்களுடன் இணைந்து போராடவேண்டியது எமது கடமையாகின்றது. எனவே இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும்வரை நான் எமது மீனவமக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன்.
எனவே முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரைக் கோருகின்றேன் – என்றார்.

