சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; ரவிகரன்
சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்தார்- ரவிகரன் எம்.பி
வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரியிலிருந்து சட்டவிரோத கடற்றொழில்கள் கட்டுப்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கமைய, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், தவறினால் வடபகுதி மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல், லைலாவலை உள்ளிட்ட இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினேன்.
இவ்வாறாக வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால், கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், சட்டத்திற்குட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் வடபகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அனைவரும் அவதியுறுவதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தியும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதை கடற்றொழில் அமைச்சரும், பிரதியமைச்சரும் ஏற்றுக்கொண்டனர்.
அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு சாதகமான பதில்களை அமைச்சர் மற்று பிரதி அமைச்சர் ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதொடர்பிலேயே தம்மாலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இதன்போது பதிலளித்தனர்.
இதேவேளை சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாமும் இருப்பதாகவும், இதுதொடர்பில் தமக்கு அறிவித்தல்கள் வழங்கப்படுவதில்லையெனவும் இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்தோடு சட்டவிரோதமாக வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் திடீரென வெளிச்சத்தினை அணைப்பதினாலும் அவர்களைக் கைதுசெய்வதில் இடர்பாடுகள் காணப்படுவதாகவும் கடற்படையினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடற்படையினரின் இத்தகைய கருத்துக்களை ஏற்கமுடியாதென தெரிவித்ததுடன், கடற்படைத் தளத்திற்கு அருகிலிருந்தான் கூடுதலான சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்கின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினேன். இருப்பினும் கடற்படையினர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைதுசெய்யத் தவறுகின்றார்கள் என்பதை குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
மேலும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களையும், சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களையும் எமது மீனவர்களாலேயே கைப்பற்றி கடற்படையிடமோ, உரிய திணைக்களங்களிடமோ கையளிக்கமுடியும் என்பதையும் தெரியப்படுத்தினேன். அவ்வாறு சட்டவிரோத கடற்றொழிலாளர்களையும், சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களையும் எமது மீனவர்கள் கைப்பற்றி உரிய திணைக்களங்களிடமோ, கடற்படையினரிடமோ ஒப்படைத்தால் சட்டவிரோதிகளுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
அதேவேளை கடற்படையினருக்கு சிரமம் இருப்பின், சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் எமது மீனவர்கள் கடற்படையினருக்கும், கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கும் உதவத் தயாராக உள்ளனர் என்ற தகவலையும் அவர்களிடம் தெரிவித்தேன்.
மேலும் ஜனவரியிலிருந்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுமென ஏற்கனவே கடற்றொழில் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தத் தவறினால் வடபகுதி மீனவர்கள் பாரிய போராட்டத்தை மேற்கொள்ளும் நிலை உருவாகும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன் – என்றார்.

