அண்மை செய்தி இலங்கை செய்தி. 

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான “பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

‘பஸ் லலித்’ இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

டுபாய் பாதுகாப்புப் படையினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக்கொலை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகாதமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 செப்டெம்பர் 20ஆம் திகதி நெலுன்துடுவ பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் காயப்படுத்த முயன்றமை தொடர்பிலும் அவிசாவளை நீதவான் நீதிமன்றம் ‘பஸ் லலித்’ மீது திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

அத்துடன், 2022 ஒக்டோபர் 16ஆம் திகதி மூவரை வெட்டிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பிலும் அவருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment