அரசாங்கத்தை வீழ்த்து வதற்கான செயற் பாடுகளில் ஈடுபடப் போவதில்லை மனோகணேசன்
ஜனநாயக ரீதியில் தேர்தலொன்று நடத்தப்படும் வரைக்கும் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடையின்றி அரசாங்கத்தின் இப்பயணம் தொடர்வதற்கு வழிவிடுவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது;
தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் மற்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் தொடரட்டும். எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில், இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது எதிராகவோ செயற்படப் போவதில்லை. அரசாங்கம் தடையின்றி அதன் பயணத்தைத் தொடரட்டும். தேர்தலொன்று நடத்தப்படும் வரை எவ்வித முட்டுக் கட்டைகளும் போடப்படமாட்டாது. அரசாங்கங்கள் வருவதும் போவதும் இயல்பான
ஒன்று. இந்நிலையில்,நாடு தற்போதைய நிலையில் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கே விரும்புகிறோம்.உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தீர்ப்பின் மூலம் மட்டுமே அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும்.இவ்விடயத்தில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

