சுயநலம் குடிகொண்டு ள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமை களை தவறி விட்டது சுதாகரன்
சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர்விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்ப்பட்டுவருகின்றது.நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்ப்பாட்டை நோக்கி நகர்ந்துவருகின்றோம்.
தற்போது தமிழ்மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவுசெய்யவில்லை. தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன.
கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விட்டது.2009 போர் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை.
நிச்சயமாக தமிழர் விடுதலை கூட்டணி அதற்கான இடைவெளியை நிரப்பும் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளரத்தோடங்கியதோ அன்று தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்து விட்டது.
நேரடியாக தந்தை செல்வாவுடனும் ஜிஜி பொன்னம்பலத்துடனும் இருந்த ஒரே தலைவர் ஆனந்தசங்கரியே அவரே இந்த கட்சியை கட்டமைத்து வருகின்றார். பழையவர்களை நாங்கள் மறக்ககூடாது.பழையவர்களின் கடந்தகால அனுபவங்களும் எங்களது புத்திசாலித்தனமுமே இந்த தேசத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்.எனவே எங்களை தமிழ் மக்கள் நம்புங்கள். இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள். என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கட்சியின் வன்னிமாவட்ட கிளையின் தலைவர் உதயன், செயலாளர் திவா, இளைஞரணி செயலாளர் பத்மகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை கூட்டணியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

