கிளியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் அதிகரிக்கும் வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை கோரி கவனயீர்ப்பு போராட்டம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்கள் தொடர்பிலும், கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற அதிபர் திரு. பெருமாள் கணேசன் அவர்களின் மரணம் தொடர்பிலும், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களது கவலைகளையும் கோரிக்கைகளையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களிடம் முன்வைத்தனர்.
இதன்போது, குறித்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பொதுமக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் முக்கிய பொது இடங்கள் மற்றும் பிரதான சந்திப்புகளில் கண்காணிப்பு கமராக்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்பதோடு சம்மந்தப்பட்ட தரப்பினரை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டார்.
அதேவேளை, வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்திய அவர், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உயிரிழப்புகளையும் விபத்துகளையும் குறைக்க முடியும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம்
ஊடகப் பிரிவு
24.06.2026

