சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இன ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு! கவிஞர் காசி ஆனந்தன்

இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடியவர், நல்லகண்ணு!
கவிஞர் காசி ஆனந்தன் கண்ணீர் அஞ்சலி!!
சென்னை, பிப். 26

 

‘பொதுவாழ்வில் தூய்மையாக வாழ்ந்த பொதுவுடைமையாளரை இழந்தோம். நெஞ்சம் நிமிர்த்தி உரிமை இழந்தோர் விடியலுக்காய் நெருப்பை எரிந்து வெடித்த தீப்பந்தமாய் அணைந்தது. வீறு கொண்ட தலைவராய் வாழ்ந்து ஆண்டுகள் நூறு கண்ட வீரவேங்கை விழி மூடியது. உலக விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா உயிர் மூச்சை நிறுத்தினார்.’

இவ்வாறு தமிழீழ நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நல்லகண்ணு ஐயா மறைவுக்குறித்த தனது இரங்கல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பதிவு செய்திருப்பதாவது:-

நல்லகண்ணு ஐயாவின் முதலானிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள்-உழவர் போராட்டங்கள் – உயர் சாதிக்காரர்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்கள் – ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்னிய விடுதலைப் போராட்டங்கள் பற்றி எல்லோரும் பேசுவர். இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் வீறு கொண்டு களமாடிய வரலாற்றை ஏனோ தெரியவில்லை, இன்று பலரும் மறந்து போனார்கள்.

அனைத்திந்திய அரசியல் கட்சிகளில் இந்திய பொதுவுடைமை கட்சி ஒன்றே தமிழீழ விடுதலைப் போரை ஆதரித்தது. 2009-ல் தமிழீழத்தில் 1 லட்சம் 40 ஆயிரம் தமிழர்கள் சிங்கள இன வெறி அரசால் ‘இனப்படுகொலை’ செய்யப்பட்டதை இந்திய பொதுவுடைமை கட்சி முழுமூச்சோடு எதிர்த்து நின்றது.

இந்திய அரசியல் வரலாற்றில் இந்த மாற்றத்தை வழிவகுத்தவர் நல்லகண்ணு ஐயா.

2009-ல் தமிழ்நாட்டில் நல்லகண்ணு ஐயா-தோழர் த. பாண்டியன், தாமரை மகேந்திரன், வீரபாண்டியன் – இவர்களெல்லாம் சிங்கள இனவெறி அரசை எதிர்த்துக் களமாடியதை அறிவோம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் வ.உ.சி அவர்கள் ஆயுள் தண்டனை பெற்றதாகப் படித்திருக்கிறேன். இணையற்ற விடுதலையாளர் நல்லகண்ணு ஐயா அவர்களும் அவர் வாழ்நாளில் ஆயுள் தண்டனை பெற்றவரே.

நூறு ஆண்டுகள் கடந்து வாழ்ந்த அரசியல் தலைவர். உயிர் பிரியும்வரை வாடகை வீட்டில் வாழ்ந்தார் என்பது அவர் பெருமையை நூறு முறை உரத்துச் சொல்லும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்லகண்ணு ஐயா ஒரு பாடப்புத்தகமாக இருக்கிறார்.

இனிய நண்பர் பழக்கடை மணிவண்ணன் ஏற்பாடு செய்த ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நிகழ்வு நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அந்த நூற்றாண்டு விழாவில் கூறியதையே இன்று பதிவு செய்கிறேன். தமிழீழ மக்களின் நெஞ்சில் நல்லகண்ணு ஐயா என்றும் நிலைத்திருப்பார். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் ஓய்ந்து விடவில்லை. ஆனால் – தமிழீழம் விடுதலை பெறும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு இன்றும் களத்திலேயே நிற்கிறோம். விடுதலை பெற்ற தமிழீழம் மலரும் அந்த இனிய பொன்னாளினில் நல்லகண்ணு ஐயா அவர்களின் வானம் தொட்ட சிலையை எங்கள் மண்ணில் நிறுவுவோம். ஒரு தேசிய இன விடுதலைப் போரில் எங்களுக்குத் துணைநின்ற இனிய தலைவனே! உன்னை நாங்கள் கொண்டாடுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment