இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒலுவில் மீனவர் துறைமுகம்,கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் கலந்துகொண்டிருந்தார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்; ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் உறுதிக் காணிகளில் அமைந்திருந்த தென்னந்தோட்டங்கள் கடலுக்குள் சென்றுள்ளன. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை வரை கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது. மாளிகைக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குரிய பொதுமையாவாடி முழுமையாக கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.எனவே, அம்பாறை மாவட்ட கடலரிப்பு விடயமாக ஜனாதிபதி அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள மீனவர்களுக்கான துறைமுகத்தை திறப்பதற்கு முன்னர், ஒலுவில் கிராமத்தில் கடலரிப்புக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பெருந்தொகையான நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒலுவில் மீனவர்களுக்கான துறைமுகத்தை செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் அவர்களுக்கான இயந்திரப் படகுகளை தடுத்து வைப்பதற்காக வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், திருகோணமலை துறைமுகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்புக்கு உள்ளான பிரதேசங்கள் தொடர்பாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார். ஒலுவில் மீனவர் துறைமுகம் தொடர்பாக மீன்பிடி அமைச்சர் விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மீன்பிடி அமைச்சர் திரு. சந்திரசேகர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை பெரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் கடல் மண் சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment