நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை; சீனத் தூதுக்குழுவும் இன்று வருகை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதோடு, இன்று மதியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.
சீனத் தூதுக்குழு வருகை:
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் இன்று இலங்கை வரவுள்ளது.டிசம்பர் 25-ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஆதரவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

