22ஆவது திருத்தச் சட்டமூலத்தை திரும்பப் பெறப்போவதில்லை ஜனாதிபதி
ஊழல்வாதிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே கறுப்பு ராஜ்யத்தைத் தகர்க்க முடியுமெனவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களும் மக்களுக்காகவே எடுக்கப்படுவதால் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
புலத்சிங்ஹல பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்ப்பு கிடைத்தவுடன், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
நாம் சட்டத்திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். நாம் எவ்வித பயமுமின்றி முன்னோக்கிச் செல்வோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது, கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.
மக்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் எந்தவொரு தீர்மானத்தையும் மக்களுக்காகவே எடுக்கின்றோம். அதனை ஒருபோதும் திரும்பப் பெறப் போவதில்லை. 22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்.
அதேவேளை தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் தேசிய தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது.
தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்து, அதற்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும் பொதுத்தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுக்கள் இதேவேளை, பேருவளையில் நேற்று நடைபெற்ற பொதுப் பேரணியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி; நாட்டில் ஊழல் மற்றும் போதைப்பொருளை ஒழிக்க மாகாண மட்டத்திலும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுக்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
”எமது அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் – மக்களுக்கு மகிழ்ச்சி” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘சில போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூட தீர்ப்பு வழங்குவதற்கு அச்சப்படும் சூழ்நிலை காணப்படுகிறது. வர்த்தகர்கள் அச்சப்படும் நிலை காணப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 70ற்கும் மேற்பட்ட சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.
தமது அரசாங்கம் எவரையும் பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை. ‘கறுப்பு தேசத்தை’ ஒழித்து நாட்டில் நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.கடந்த காலங்களில் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு சர்வதேச ரீதியில் இலங்கை உதாரணமாகக் குறிப்பிடப்பட்டது.
எனினும், தற்போது சர்வதேச அளவில் இலங்கை தொடர்பில் காணப்பட்ட எதிர்மறையான நிலைமையை மாற்றியுள்ளோம். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் சர்வதேச நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.மேலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடாக இலங்கை பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் இனவாத மோதல்கள் ஏற்பட்டிருந்தன.
சிங்கள மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுக்கு ஒரே கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டன. அளுத்கம, அக்குறணை, திகன உட்பட பல பகுதிகளில் இனவாத மோதல்கள் இடம்பெற்றிருந்தன.இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்களை இன ரீதியாகப் பிரித்து ஆட்சி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.
எனினும், கடந்த இரண்டு வருடங்களாக இனவாத அடிப்படையிலான மோதல்கள் பொலிஸில் பதிவாகாத நாடாக இலங்கை காணப்படுகிறது. எனவே கறுப்பு தேசத்தை ஒழித்து வளமான ஒரு நாட்டை நாம் உருவாக்கி வருகின்றோம்.
எனவே, இந்த பொறிமுறையை வலுப்படுத்த இலஞ்ச , ஊழில் ஆணைக்குழுவை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் மாகாண மட்டத்தில் இலஞ்ச,ஊழில் ஆணைக்குழுக்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

