தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வினாசிகுளம் பால த்தை நிர்மானிக்க நடவடிக்கை ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

வவுனியா வடக்கு வினாசிகுளம் பாலத்தை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, மாமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதிமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார். இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக் காணப்படுவதாலும், அவ்வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை அமைக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராமமக்கள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும் சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் இதன்போது முறையிடப்பட்டது.

அத்தோடு மழைக்காலங்களில் குறித்த சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் சேனைப்புலவு கிராமத்தினூடாக 4கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதேவேளை குறித்த வினாசிகும் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக விவசாயத்திற்குரிய உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலை குறித்த வினாசிகுளம் பாலத்தை அமைக்குமாறு கிராமமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப் பாலத்தினை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்தபாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

எனவே குறித்த சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம் பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரியீநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச் சீரமைப்பதுதொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது இந்த களவிஜயத்தில் வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment