தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி – மடக்கிப்பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி  காவல் துறை பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சருகு புலி, அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கிராம மக்கள் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினருடன் இணைந்து.மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சருகு புலி பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள் திணைக்கள வாகனத்தை வரவழைத்து பாதுகாப்பாக கொண்டுசென்றுள்ளனர்.

சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டமை காரணமாக அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment