யாழிலிருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேரும் சுங்க அதிகாரிகள். விசாரணை செய்ய நீதிமன்று அனுமதி
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்துள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் (17) பயணிக்க இருந்த பயணிகளில் இந்திய பிரஜைகளான இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் 26 பேரையும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கான் செய்தனர்.அதன் போது 06 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து 06 பேரையும் தமது காவலில் எடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள், ஏனைய 20 பேரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர்.
அந்நிலையில் தங்க கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்திய சுங்க திணைக்கள அதிகாரிகள் , இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் தமது காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் , நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

