முல்லை மற்றும் மன்னார் மருத்துவமனைக்கு CT, MRI இயந்திரங்கள் ரவிகரன் கோரிக்கை
முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு CT, MRI இயந்திரங்கள் வழங்கப்படும்; ரவிகரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதில்
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் CT, MRI இயந்திரங்கள் இன்மையால் நோயாளர்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு துரிதகதியில் CT, MRI இயந்திரங்ளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விரைவில் CTஇயந்திரம் வழங்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, முல்லைத்தீவு மாவட்ட பொதுமருத்துவமனைக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT, MRI இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றில் 04.08.2026இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னாரில் CT ஸ்கேனர் வசதி ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்திலும் CTஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு நோயாளர்கள் அவதிப்படுகின்றார்கள்.
குறிப்பாக பலநூற்றக்கணக்கான நோயாளர்கள் CTஸ்கேன் இற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சென்றுவரவேண்டிய நிலையே காணப்படுகின்றது.
எனவே இந்த CTஸ்கேனர் வசதி முல்லைத்தீவில் ஏற்படுதப்படவேண்டுமெனப் பாதிக்கப்படுகின்ற மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார்.
இதன்போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளிக்கையில்,
நாங்கள் மன்னாருக்கான CT இயந்திரத்தை விரைவில் வழங்குகிறோம்.
அதேபோல் முல்லைத்தீவில் எங்களது புதிய மருத்துவ விடுதி வளாகக் கட்டுமானப் பணிகளை இந்த வருடம் நவம்பர் மாதமளவில் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.
இப்போது நாங்கள் எதிர்வரும் ஆண்டுக்காக CT, MRI உள்ளிட்ட இந்த உபகரணங்களுக்காகத் தயாரித்துள்ள பட்டியலைச் சில மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
ஜனாதிபதியுடன் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போதும் இந்த அவசியமான உபகரணங்களை ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சு கவனம் செலுத்தியது.
அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பாகவும், நாங்கள் எதிர்வரும் ஆண்டில் பொதுவாக எமக்கு மூன்றாவது காலாண்டு அளவில் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனப் பதிலளித்தார்

