மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப் பென்பது “நவீன தீண் டாமை” ரவிகரன் எம்.பி;
மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி; அவர்களின் நிருவாகக் கொடுப்பனவு மற்றும் இடமாற்றம் தொடர்பிலும் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்
மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக்கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிபிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மிகை ஊழியர் அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி அரசசேவைகள் ஆணைக்குழுவுடன் பேசவிருப்பதாகவும், அதிபர் நியமனங்களைக் கோராத பாடசாலைகளுக்கு எவ்வாறு அதிபர்களை ஈடுபடுத்துவது என்பது தொடர்பில் இதன்போது கவனஞ் செலுத்தப்படுமெனவும் பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றில் 07.08.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே இந்த மிகை ஊழியர் அதிபர்களுக்கு நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
மிகைஊழியர் அதிபர் விடயத்தில் ஓர் அரசாக தங்களின் நிலைப்பாடு பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதாகத்தான் அமையவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
அவர்கள் இப்பொழுதும் இடர்படுகின்ற இரண்டு பிரச்சினைகளுள் ஒன்று அவர்களுக்குரிய நிருவாகக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை தொடர்பானது.
அவர்களும் ஏனைய அதிபர்களைப் போல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் என பெரும் ஆளணிக்கு தலைமை வகிக்கின்றார்கள். இருந்தபோதும், ஏனைய அதிபர்கள் பெறும் நிருவாகக் கொடுப்பனவு அவர்களுக்கு இதுவரை வழங்கப்படாதுள்ளது.
இப்பொழுது சில ஆண்டுகளாக வடக்குமாகாணக் கல்வி அமைச்சினால் கோரப்படும் அதிபர் விண்ணப்பங்களில் மிகை ஊழியர் தவிர்ந்த அதிபர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
விண்ணப்பிப்பதிலும் புறக்கணிப்பு, கல்விச் சூழமைவில் இது ஒரு நவீன தீண்டமையாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமா என பிரதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
எனவே தயவுசெய்து பிரதிஅமைச்சர் இவ்விடயத்தில் கவனமெடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
தயவுசெய்து இந்த விடயத்தில் புறக்கணிப்புக்களைச் செய்யவேண்டாமெனவும் கேட்டுக்கொள்ள விடும்புகின்றேன்.
வடக்குமாகாணத்தில் ஒரு தொகுதி அதிபர்கள் ஒருவிதமாகவும், ஏனைய அதிபர்கள் வேறுவிதமாகவும் நடாத்தப்படுகின்றனர். இவ்வாறான புறக்கணிப்புக்களைச் செய்யவேண்டாம் என்றுதான் நான் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்
இந்நிலையில் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன இதன்போது பதிலளிக்கையில்,
மிகை ஊழியர் அதிபர்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தில் தேசிய பாடசாலையில் ஒருவரும், மாகாண பாடசாலைகளில் 52பேருமாக மொத்தம் 53மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
அதேவேளை தீவளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் 06பேரும், மாகாணப் பாடசாலைகளில் 631பேருமாக மொத்தம் 637 மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
கடந்த 2012.08.08ஆம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிபர்களின் நியமனக் கடிதங்களுக்கு அமைவாக, அவர்களுக்கு அதிபர்களுக்கான சம்பளத்தினை மாத்திரமே பெற்றுக்கொள்ள வாய்பிருக்கின்றது.
நிர்வாக கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் அவர்களுக்கில்லை.
எனவே மிகை ஊழியர் அதிபர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஆராயப்பட்டது.
இருப்பினும் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிபிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ஆனாலும் நாம் தற்போது மிகை ஊழியர் அதிபர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றோம். உத்தியோகத்தர்கள் மட்டத்திலும் கலந்துரையாடியிருக்கின்றோம். அத்தோடு அரசசேவைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.
உண்மையில் மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கணிசமான பணிகளை ஆற்றுகின்றனர். அனைத்து விடயங்களும் எம்மால் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை அதிபர்களை இடமாற்றும்போது மாகாணமட்டத்தில் சில பிரமாணங்கள் இருக்கின்றன. சில பாடசாலைகளில் 15 தொடக்கம் 20ஆண்டுகளாக அதிபர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
உரியமுறையில் அதிபர்களை கோராதவரையில் அதிபர் வெற்றிடம் பூத்திசெய்யப்படுவதுமில்லை.
அரசசேவைகள் ஆணைக்குழுவுடன் எதிர்வரும் 11ஆம்திகதி பேசஇருக்கின்றோம். அதிபர் நியமனங்களைக் கோராத பாடசாலைகளுக்கு எவ்வாறு அதிபர்களை ஈடுபடுத்துவது என்பதுபற்றி பேசவிருக்கின்றோம் – என்றார்.

