தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உள்ளகப் பொறி முறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார்

தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்.” – என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின் இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

“போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம் தமிழினத்துக்கு  நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குகின்றது. கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர, ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால், அப்போதும் கூட அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள் மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மக்கள் நீதியைக் கோரியும் எவரும் செம்மணி குறித்துப் பேசத் தயாராக இருக்கவில்லை. இந்நிலையில், 2009 மே 18 இற்குப் பிறகு அழிக்கப்பட்ட ஆத்மாக்களின் அநியாயம் மூடிமறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தற்செயலாகச் செம்மணிச் சுடலையில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது காலம் காலமாக அரசுகள் மாறி மாறித் தமிழினத்தைக் குறிவைத்துள்ளன என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சாட்சியமாகும்.

ஆனால், இந்தச் சூழலில்தான் போர் முடிவதற்குச் சற்றும் நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்து, ‘எந்தவொரு இராணுவச் சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள்’ என்று பகிரங்கமாகக் கூறிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அத்தகையதொரு சூழலில்தான் செம்மணி விவகாரம் வெளிப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கே நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதாக இந்த அரசின் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், உள்ளக விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காது என 2014 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆகவே, செம்மணி மனிதப் படுகொலை போன்ற எந்தவொரு குற்றத்துக்கும் எவரையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டோம் என்று பகிரங்கமாகச் சொல்லும் அரசின்ன் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகளை விட்டால், சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.

நாளை ஜெனிவாவில் ஐ.நா. அமர்வுகள் நடைபெறும் சூழலில், தாய்மண்ணில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உள்ளக விசாரணைகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழினப் படுகொலை என்பது இலங்கை அரசால்தான் செய்யப்பட்டது என்பதை உலகுக்கு உணர்த்தி, எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எங்களை நாமே ஆளக்கூடிய சூழலை ஏற்படுத்துவதன் மூலமே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஒரே தீர்வு நம்பகத்தன்மையான சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டுமே.” – என்றார்.

அன்மைச் செய்தி

Leave a Comment