சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று அரசமைத்துள்ள ஜே .வி.பி.-என்.பி.பி. யை சேர்ந்த 60,000 க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர் ,யுவதிகள் படுகொலைசெய்யப்பட இந்த பயங்கரவாத தடை சட்டத்தை ஐக்கியதேசியக்கட்சியைச் சேர்ந்த ஜே .ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் மிகக் கொடூரமாக பயன்படுத்தியிருந்தனர்.

