ஒட்டு சுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்
ரவிகரன் எம்.பியின் தொடர் கோரிக்கை; ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் ஒட்டுசுட்டான் தட்டாமலை இணைப்பு வீதியின் தாழ்நிலப்பகுதியின் சீரமைப்புபணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும் தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், குறித்த பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்கள் (பெட்டி மதகுகள்) உடனான உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், இரண்டு கோடியே ஒருஇலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பதுரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியானது மழைக் காலங்களில் ஏம்பல் குளத்து நீரால் மூழ்குவதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 2025.12.05 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினர் கோரிக்கைக் கடிதமொன்றை வழங்கியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025.12.07 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நீரால் மூழ்கும் குறித்த பகுதியைப் பார்வையிட்டதுடன், அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்களின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2025.12.22ஆம் திகதியன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் குறித்த பாதையால் மக்கள் பயணம் செய்ய இயலாத நிலையை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் எடுத்துரைக்கப்பட்டதுடன், மக்களின் குறித்த போக்குவரத்துநெருக்கடியை தீர்ப்தற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குரிய ஒதுக்கீடு 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என குறித்த கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2026.02.23 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி பாதைக்கான மறுசீரமைப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளருடன் உரையாடிபோது குறித்த வீதியின் சீரமைப்பிற்குரிய ஒதுக்கீடு இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இதுதொடர்பில் மீண்டும் கடந்த 2026.04.03ஆம் திகதியன்று வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வினவியபோது, நாட்டில் நிலவும் சமகால நெருக்கடி நிலையால் மேற்குறித்த பணி சற்று தாமதமடைவதாகவும் எனினும் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் மாதத்திற்கு முன்னர் குறித்த வீதிச்சீரமைப்புபணிகள் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கமைய ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும் தட்டாமலை, ஒட்டுசுட்டானை இணைக்கும் பாதையின் தாழ்வாக உள்ள பகுதி நீர் ஓடும் கட்டுமானங்கள் (பெட்டி மதகுகள்) உடனான உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், இரண்டு கோடியே ஒருஇலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பதுரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இவ்வாறாக சீரமைப்பு வேலைகள் இடம்பெற்றுவரும் குறித்தபகுதிக்கு அண்மையில் நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அத்தோடு தனது தொடர்ச்சியான வலியுத்தலுக்கமைவாக குறித்த ஒட்டுசுட்டான் தட்டாமலை வீதியின் நீரில் மூழ்கும் பகுதி சீரமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்கு தீர்வைப் பெற்றுக்ககொடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இந்தக்களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் கு.கஜீவன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

