எரிபொருள் விநியோகbத்திற்கு. தொடர்ந்தும் QR
மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெற்றோல் பாவனை சுமார் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு தொடர்ந்தும் தடங்கலின்றி எரிபொருள் வழங்கப்படும். உலகளாவிய எரிபொருள் நிலைமை சீரடையும் வரை QR முறையானது இன்னும் சில காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

