உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கைதை தடுக்க கோரும் கோட்டாவின் மனு நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்வதைத் தடுக்கும் வகையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை நேற்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், தம்மை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனைத் தடுக்குமாறும் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு தொடர்பான விசாரணைகள் பல கட்டங்களாக இடம்பெற்றன.
இந்த வழக்கில் அரச தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மனுவில் முன்வைக்கப்பட்ட சில தகவல்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது மனுவில் அசாத் மௌலானாவை அறியவில்லை எனக் குறிப்பிட்டிருந்த போதிலும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாக, ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோட்டாபய வழங்கியிருந்ததாகக் கூறப்படும் வாக்குமூலமும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஒருவருடன் புகைப்படம் எடுத்திருப்பது மட்டும் குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என்பதற்கான ஆதாரமாகாது என வாதிட்டிருந்தார்.
மனுவின் சில கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளதால், இந்த விவகாரத்தை அரசியலமைப்பின் 126ஆம் பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என அரச தரப்பு முன்னதாக கோரியிருந்தது. இரு தரப்பினரின் வாய்மொழி வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,முன்பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தீர்மானித்திருந்தது.அதன் பிரகாரம் நேற்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

