ஈழத்தின் யாழ்ப்பாண த்தில் நடந்தேறிய ‘வைரக்குடுவை தொகுதி 02’ நூலின் வெளியீட்டு விழா
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‘வைரக்குடுவை தொகுதி 02’ நூலின் வெளியீட்டு விழா.
வைரக்குடுவை தொகுதி 02 நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய வீரகேசரி வார வெளியீடு பத்திரிகையின் பிரதி ஆசிரியர் திருமதி ரேணுகா பிரபாகரன் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார். ‘இயந்திரமயமான புலம்பெயர் வாழ் கால ஓட்டத்தில் தனக்கு தனக்கு என தாவியோடும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு வாரமும் மூலை முடுக்கில் உள்ள ஒவ்வொரு ஆளுமைகளையும் தேடிப்பிடித்து தகவல்களை திரட்டி இவ்வரிய கட்டுரைகளை து.திலக்(கிரி) அவர்கள் தருகின்றார்’ என்று.
உரும்பையூர் என சிறப்பித்துச் சொல்லப்படும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும் சுவிற்சர்லாந்தில் வசிப்பவருமான ஈழத்துப் படைப்பாளர் து. திலக் (கிரி) அவர்கள் ஈழத்தின் வீரகேசரி பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் தொடராக எழுதி வருகின்ற ஆளுமைகள் பற்றிய ஆவணவாக்கல் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகிய வைரக்குடுவை தொகுதி இரண்டு நூல் வெளியாகியுள்ளது. வைரக்குடுவை நூலில் 25 ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு, கலை இலக்கியம் சார்ந்த பதிவுகள் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே வைரக்குடுவை தொகுதி ஒன்று வெளியானது. அதன் தொடர்ச்சியே தொகுதி இரண்டு.
வைரக்குடுவை தொகுதி 02 நூலின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் யாழ்ப்பாணம் சேர். பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள ராஜா கிறீம் கவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பாடலாசிரியரும் கவிஞருமான ‘கவிராஜராஜன்’ கு.வீரா தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டார்.
வைரக்குடுவை தொகுதி இரண்டு நூலில் இடம்பெறும் 25 ஆளுமைகளின் அடையாளங்களை தாங்கிய பதாதை நிகழ்வு அரங்கினை அலங்கரிக்க நிகழ்வு மண்டபம் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தொடக்க நிகழ்வாக நிகழ்வின் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுடன் இணைந்து வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றலினை தொடர்ந்து மறைந்த கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கான நினைவு வணக்கம் இடம்பெற்றது. நாவண்ணன் அவர்கள் வைரக்குடுவை தொகுதி 02 நூலில் இடம்பெறும் ஆளுமை ஆவார். நாவண்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை குடும்பத்தினர் அணிவித்து மலர் வணக்கம் செய்தனர்.
அகவணக்கம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இறைவணக்கப் பாடலை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி அனோலா விஜய் இசைத்தார். தமிழ்மொழி வாழ்த்தினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான திருவருட்செல்வன் திருவர்த்தனன், கோகுலன் சாகித்தியன் ஆகியோர் இசைத்தனர்.
வரவேற்பு நடனத்தினை திருமதி ஜெயரஞ்சனி குயின்ரஸ் அவர்களின் மாணவிகளான ரா.றொபாசி பிராங்கா, டி.டிலக்சனா, இ.சபீனா, ஏ.செரின் ஒலிலியா, லா.கிரின்சிகா, சு.ஏஞ்சலின் ஆகியோர் வழங்கினர். தமிழைப் போற்றிடும் வரவேற்பு நடன பாடலை கு.வீரா அவர்கள் எழுத ஜேர்மன் கண்ணன் பாடியிருந்தார்.
வரவேற்புரையினை நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களுள் ஒருவரான வில்லிசைக் கலைஞர் சு.ஜெயராசசிங்கம் நிகழ்த்தினார். ஆசியுரைகளை சிவஸ்ரீ செந்தில்நாதக் குருக்கள் அவர்களும், அருட்தந்தை ம.போல் நட்சத்திரம் அடிகளார் அவர்களும் வழங்கினர்.
தலைமை உரை நிகழ்த்திய கு.வீரா அவர்கள் வைரக்குடுவை நூலின் முக்கியத்துவத்தினை நான்கு அம்சங்களில் வெளிப்படுத்தி இருந்தார். நவீன தொழினுட்பத்தின் ஆதிக்கம் சூழ்ந்துள்ள இக்காலகட்டத்தில் அச்சாக்க ஆவணத்தின் முக்கியத்துவம் எத்தனை பெரியது என்பதை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வாழ்த்துரை வழங்கிய கவிஞர் வேலணையூர் சுரேஷ் அவர்கள் ‘புலம்பெயர் வாழ்வியல் சூழல் இறுக்கமானது. அங்கே இடைவேளைகள் அரிது. அந்த இடைவேளைகளை தாயக படைப்பாளர்களுக்காக பயன்படுத்தும் திலக் அவர்களின் செய்கை மேன்மையானது’ என்று குறிப்பிட்டார்.
வாழ்த்துரை வழங்கிய சமூக செயற்பாட்டாளரும் இசையமைப்பாளருமான ஞானவெளிச்சம் வொட்கிட்சன் அவர்கள் ‘வைரக்குடுவை நூல் என்பது வரலாற்று சேமிப்பகம்’ என்றார்.
நூலின் அறிமுக உரையினை ஏர்நிலம் தொண்டமைப்பு ஆலோசகரும், மேனாள் அதிபருமான சூரியகுமாரி இராசேந்திரம் அவர்கள் வழங்கினார்.
வைரக்குடுவை தொகுதி 02 நூலினை சுவிற்சர்லாந்து தமிழர் களறி ஆவணவகம் வெளியீடு செய்திருக்கின்றது. குறித்த அமைப்பின் சார்பில் வெளியிட்டுரையினை கலாபூசணம் நடராசா இராமநாதன் (கோகுலன்) அவர்கள் வழங்கினார்.
நூலினை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நூலாசிரியரின் பெற்றோரான திரு திருமதி துரைராசா குனேஸ்வரி இணையரிடமிருந்து பெற்று வெளியிட்டு வைத்தார். நூலின் முதலாவது பிரதியினை தொழிலதிபரும் தியாகி அறக்கொடை நிலையத்தின் தலைவருமான வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூலினை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து நூலின் நயப்புரையும் குறித்த நயப்புரையில் இடம்பெறுகின்ற ஆளுமைகளுக்கான மதிப்பளிப்பும் இடம் பெற்றன.
ஆளுமைகளான இராஜா மகேந்திர சிங்கம், சந்திரவதனா செல்வகுமாரன், நீலையூர் சுதா, சத்தியா மெண்டிஸ், மன்னனூர்ப் பாரதி, விபுலானந்தன் கௌரிதாசன் ஆகியோர் பற்றிய நயப்புரையினை ஈழத்துப் பெண் படைப்பாளி சங்கரி சிவகணேசன் அவர்கள் வழங்கினார்.
சிறப்புரையினை நல்லூர் ஆதீனம் முதல்வர் வேலன் சுவாமிகள் நிகழ்த்தினார். ‘மொழி அழியாது காப்பதில் இலக்கியங்களின் வகிபாகம் பெரிது. மொழியோடு ஆளுமைகளையும் வைரக்குடுவை பதிவு செய்கின்றது’ என்றார்.
தொடர்ந்து நூலில் இடம்பெறும் ஆளுமைகளான ச.வே.பஞ்சாட்சரம், நாவண்ணன், அஷ்ரபா நூர்தீன், யோ.புரட்சி, ஷெல்லிதாசன், பவுண் ஆகியோர் பற்றிய நயப்புரையினை யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எழுத்தாளர் வேல் நந்தகுமார் வழங்கினார்.
சிறப்புரை நிகழ்த்திய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் அவர்கள் ‘வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளர்களை மாத்திரமல்ல தமிழ் மொழிக்கு பங்காற்றி மறைந்து போன படைப்பாளர்களையும் கூட வைரக்குடுவை ஆவணப்படுத்துவது போற்றக்கூடியது’ என்றார்.
நூலில் இடம்பெறும் ஆளுமைகளான என்.எஸ்.மணியம், உடுவிலூர்க் கலா, பொலிகையூர்க் கலா, பொலிகையூர்க் கோகிலா, வை.கஜேந்திரன், ஊரெழு பகி, தமிழ்மொழி ஆகியோர் பற்றிய நயப்புரையினை திருகோணமலை வாழ் படைப்பாளியும் மேனாள் அதிபருமான கனகசூரியன் யோகானந்தம் வழங்கினார்.
பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நிகழ்த்தினார். ‘முரணானதும் போலியானதுமான தகவல்கள் அதிகமாக பரப்பப்படுகின்ற இக்காலத்தில் சீர்பட ஆய்வு செய்து எழுதப்படும் ஒரு நூலாக வைரக்குடுவை காணப்படுகின்றது’ என்றார்.
ஈழத்துப் பெண் படைப்பாளி கோபிகை அவர்கள் தொகுதி 02 நூலில் இடம்பெறும் ஆளுமைகளான ஞானசுந்தரி வாசன், ரொசில்டா அன்ரன், மகிழன் சந்தோஸ், பிரவாகினி பிரபு, எஸ்.ராதேயன், அன்னைதாசன், ஆர்.ஜெ.கலா ஆகியோர் பற்றிய நயப்புரையினை வழங்கினார்.
யாழ்ப்பாணம் உயரப்புலம் மெதடிஸ்த மிசன் வித்தியாலய மாணவி ய.யஸ்மிதா அவர்களின் நடனக்காட்சி நிகழ்விலே நல்லதொரு கலை விருந்தானது.
நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர்களான கொற்றவை றொபேட் ஐவின், சி.ஆசைரட்னம்( ரட்ணா/ தொல்காப்பியன்) ஆகியோர் தமிழ்ச் செழுமையுடன் தொகுத்து வழங்கினர்.
வைரக் குடுவை தொகுதி 02 நூலில் இடம்பெறும் ஆளுமைகள் சார்பில் வைரங்கள் வாய் மொழிந்தவை இடம்பெற்றன. யோ.புரட்சி தனது கருத்துரையில் யாழ்ப்பாணத்தில் குரும்பையூர் மற்றும் உரும்பையூர் ஆகிய ஊர்கள் ஆவணவாக்கலில் சிறந்து விளங்குகின்றன. குரும்பையூரில் இருந்து இரா. கனகரத்தினம் அவர்களும் உரும்பையூரில் இருந்து து.திலக் அவர்களும் ஆவணவாக்கலில் முக்கியமானவர்கள் என்றார்.
கவிஞர் அன்னைதாசன் அவர்கள் வைரக்குடுவை தொகுதி இரண்டு நூலுக்கான வாழ்த்தினை பாடல் வடிவில் வழங்கினார்.
நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியரும் ஈழத்துப் படைப்பாளருமான து.திலக்(கிரி) அவர்கள் சுவிற்சர்லாந்தில் இருந்து நேரலையாக வழங்கினார். ‘தாயக படைப்பாளர்களை ஆவணவாக்கும் இந்த பெரு முயற்சியில் வீரகேசரி பத்திரிகை அளித்திருக்கின்ற வாய்ப்பினை தமிழர்கள் மறந்து விடக்கூடாது. போர் முடிந்த சூழலில் வாழும் எம் உணர்வு மிக்க படைப்பாளர்கள் பற்றிய ஆவணம் எமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கின்ற பெரு இலக்கியச் செயற்பாடு’ என்றார் அவர்.
நன்றியுரையினை அரங்கச் செயற்பாட்டாளரும் யோகா ஆசிரியருமான ஒலிப்பதிவாளர் குமாரு யோகேஸ்வரன் வழங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட யாவருக்கும் அன்பின் மதிய உணவு அளிக்கப்பட்டது. வைரக்குடுவை நூலின் வெளியீட்டு விழாவில் நிறைவான இலக்கிய விரும்பிகள் கலந்து கொண்டனர்.
நூலுக்கான பின்னட்டை குறிப்பினை ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளியும் சுவிற்சர்லாந்தில் வாழ்பவருமான ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் வரைந்திருக்கின்றார். நூலுக்கான ஆசியுரைகளை திரு. திருமதி துரைராசா குனேஸ்வரி, கலாநிதி து.ஜெகதீஸ்வரக் குருக்கள், பேரருட் கலாநிதி அந்தோனிபிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோரும், வாழ்த்துரைகளை வீரகேசரி வார வெளியீடு பிரதி ஆசிரியர் ரேணுகா பிரபாகரன், கலாபூசணம் முல்லை மாயவதாசன்(செல்லக்குட்டி), பேராசிரியர் சுகன்யா அரவிந்தன், ஆகியோரும் வழங்கி இருக்கின்றனர். தமிழர் களறி வெளியிட்டுள்ள இந்நூலின் வெளியீட்டு உரையினை தமிழர் களறி சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி வழங்கியுள்ளார். அணிந்துரையினை கவிஞரும் எழுத்தாளருமான புலோலியூர் வேல் நந்தகுமார் எழுத, முகவுரையினை நூலாசிரியர் து.திலக் (கிரி) அவர்கள் எழுதியுள்ளார்.
நூலுக்கான அட்டைப் படத்தினை பிரான்ஸ் ஜெயா சஞ்சீவ் அவர்கள் வரைய, நூல் வடிவமைப்பினை ரத்னாங்கி கிரியேஸ்வரன் அவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
நூல் ஒப்புநோக்கல்: நடராசா இராமநாதன், சின்னக்கோன் ஆசைரட்ணம், முகுந்தினி வைத்திலிங்கம், ஆதிலட்சுமி சிவகுமார், ரத்னாங்கி கிரிகேஸ்வரன்
ஒளிப்படங்கள்


