இலங்கையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் கடுமையாகும் சட்டம்
இலங்கையின் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது அதற்கமைய, இலங்கையில் இருந்து அங்கீகரிக்கப்படாத முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குற்றவியல் குற்றமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்பணமாக வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பிவிட்டு, நியாயமான காலப்பகுதிக்குள் அதற்கேற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
அதனை செய்யத் தவறும் ஒருவரின் பரிவர்த்தனையானது, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றமாகக் கருதப்படலாம்.
தற்போதைய சட்டத்திற்கமைய, அங்கீகரிக்கப்படாத முறையிலான பண அனுப்பீட்டின் பெறுமதிக்குச் சமமான நிதிக் தண்டப்பணத்தை இலங்கை மத்திய வங்கியால் இலங்கை ரூபாயில்ல் விதிக்க முடியும்.
எனினும் அவ்வாறான பரிவர்த்தனைகள் தற்போது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. இதனால் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கான சட்ட அடிப்படையானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வலுவூட்டும் வகையில் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது
அதற்கமைய, நிதியியல், திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற ரீதியில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், 2017 ஆம் ஆண்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தைத் திருத்தி, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களைக் குற்றவியல் குற்றங்களாக மாற்றும் இவ்வாறான விதிகளை அறிமுகப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.

