அரசாங்க மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது! நளிந்த ஜயதிஸ்ஸ
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேவையானால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றம் செல்லலாம் என சபையில் குறிப்பிட்ட அவர், புதிய நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பும் அத்துடன் மக்கள் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மாதத்தில் மாத்திரம் 5 தடவைகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது. அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரையறுக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றார்கள்.நியமனம் வழங்கல் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் சேவை நியமனம் வழங்கல் தரப்படுத்தலின்போது தாம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

