அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பள விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு – கொகுத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார்காணிகளிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளிலும் அத்துமீறி சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுகின்ற விவகாரத்தில், மகாவலி அதிகாரசபைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திடமும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திடமும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 01.10.2026நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்த்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள 44.197ஏக்கர் காணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளையும், பெருமளவான தமிழ்மக்களின் தனியார்காணிகளையும் அத்துமீறி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள, குறித்த சட்டவிரோத உப்பளம் அகற்றப்படவேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
ஆனால் மகாவலி அதிகாரசபை உப்பளம் அமைக்கப்பட்டுள்ள பகுதி வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியெனவும், தமக்குரித்தான பகுதியெனவும் தெரிவித்துவந்தனர்.
இத்தகைய சூழலில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தால் நிலஅளவைத் திணைக்களத்தின் ஊடாக அந்தப் பகுதிக்குரிய சுவட்டு வரைபடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் நிலஅளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்தின் பிரகாரம் குறித்த உப்பளம் அமைக்கப்படும் பகுதி கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர் பிரிவிற்குட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் உப்பளத்திற்கென மொத்தம் 44.197ஏக்கர் காணி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதும் இனங்காணப்பட்டுள்ளது.
அதில் 13ஏக்கர் 02ரூட் காணிகள் அரச காணிகள் எனவும், மிகுதி 31ஏக்கர் தனியார் காணிகளாகவும் இனங்காணப்பட்டுள்ளன.
அத்தோடு எமது மக்களிடமிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் பெறப்பட்ட தனியார் ஆவணம் ஒன்று, நில அளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்துடன் தொடர்புடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஆவணரீதியாக அந்தப் பகுதி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குரியதெனவும், பெரும்பகுதி தமிழ் மக்களுக்குரிய தனியார் காணிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட பிற்பாடும் அங்கு சட்டவிரோத உப்பளச் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தோடு குறித்த பகுதியானது கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியென ஆவணரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதியென மகாவலி அதிகாரசபைக்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் அறிவித்தல் வழங்கிய நிலையில், அந்த வரைபடங்களைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது.
மகாவலி அதிகாரசபை தொடர்ந்தும் இவ்வாறு திருட்டுவேலைகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
மகாவலி அதிகாரசபை தொஞர்ந்தும் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகமோ அல்லது முல்லைத்தீவு மாவட்ட செயலகமோ சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலக காணிப்பிரிவு இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் திரட்டி வைத்திருப்பதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர், இதுவிடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

