இலங்கை செய்தி. செய்திகள் 

கிவுல் ஓயா திட்டத்தில் குடியேற்றங்கள் நிறுவப்படாது

வெளிமாவட்டங்களிலிருந்து புதிய குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் கிவுல் ஓயா திட்டத்தில் இல்லையென்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவரென்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது;

கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.துரதிஷ்டவசமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்நகர்த்த முடியாதிருந்தது.கொழும்பிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதாலேயே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் எழுந்துள்ளன. நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான அச்சம் ஏற்படுவது இயல்பானது.ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் நீர்ப்பாசனத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள், அங்கு வாழ முடியாது வெளியேறியதே யாதார்த்தமாகும்.அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நீர் வசதிகள் இல்லாமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.தற்போது கரைத்துறைப்பற்று, வவுனியா வடக்கு போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் விவசாயம் செய்கின்றனர். அதேபோன்று ஜனக்கபுர உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் விவசாயம் செய்கின்றனர்.இவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களையும் உள்ளீர்த்து நாம் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறோம்.

Leave a Comment